மலேசியாவில் அண்மையக் காலமாக அதிவேகமாக அதிகரித்து வரும் இணையக் குற்றங்களில் 'லவ் ஸ்கேம்' (Love Scam) எனப்படும் காதல் மோசடி மிக ஆபத்தான ஒன்றாக உருவெடுத்துள்ளது. வெறும் பணத்தை இழப்பதோடு மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், மனநலத்தையும் இது சீரழித்து விடுகிறது. இந்த மோசடிக் கும்பலின் முதன்மை இலக்காகத் தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற மூதாட்டிகள் இருப்பதுதான் தற்போதைய பெரும் கவலையாகும்.
இணையத்தளங்கள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் போலி கணக்குகளை உருவாக்கி, பெண்களிடம் அன்பாகப் பேசி, காதல் வயப்பட வைத்து, பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி நயமாகப் பணத்தைப் பறிக்கும் திட்டமிட்ட ஏமாற்று வேலையே 'லவ் ஸ்கேம் ' ஆகும்.
அரச மலேசிய போலீஸ் படையின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தகவல்படி, காதல் மோசடிகளில் சிக்குபவர்களில் 75% க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். கணவனை இழந்த அல்லது விவாகரத்துப் பெற்ற தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் முதிய வயதில் வீட்டில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளின் பாசக் காலிடத்தையும், துணையற்ற நிலையையும் மோசடிக் கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது.
முகநூல், வாட்ஸ்அப் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளில், தங்களை லண்டன் அல்லது அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் அல்லது விமான ஓட்டிகள் போல அழகான போலிப் புகைப்படங்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பலவீனங்களை அறிந்து, அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைப் போலவே பேசி, மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் முழு நம்பிக்கையையும் காதலையும் பெற்று விடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் மனதைக் கவரவும், பின்னர் பணத்தைப் பறிக்கவும் இந்தக் கும்பல் பொதுவான உத்திகளைப் பயன்படுத்துகிறது.
உன்னைத் திருமணம் செய்து கொண்டு மலேசியாவிலேயே குடியேறப் போகிறேன் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறுவர். தங்கம், வைர நகைகள், பிராண்டட் உடைகள், மற்றும் வெளிநாட்டுப் பணம் அடங்கிய பார்சல்களை மலேசியாவிற்கு அனுப்பியிருப்பதாகக் கூறுவர்.
பார்சல் மலேசியச் சுங்கத்துறையில் மாட்டிக் கொண்டது, அல்லது எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அதை விடுவிக்க உடனடியாகப் பணம் அனுப்பக் கோருவர். தங்களுக்குத் திடீர் விபத்து ஏற்பட்டு விட்டது அல்லது மருத்துவ அவசரநிலை என நாடகமாடி உணர்ச்சிப்பூர்வமாகப் பெண்களைப் பணிய வைப்பார்கள்.
மலேசியாவில் இந்த மோசடியின் தீவிரம் கோடிக்கணக்கான ரிங்கிட் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் 41 முதல் 50 வயதுடைய பெண்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய புள்ளி விவரங்களின்படி 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூதாட்டிகளே இந்தக் கும்பலிடம் அதிகம் பணத்தை இழக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 770 காதல் மோசடி வழக்குகள் பதிவாகி, மலேசியப் பெண்கள் 45.9 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர். சமீபத்தில் 67 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 7 ஆண்டுகளில் தனது சேமிப்பு மற்றும் கடன்கள் மூலம் 2.2 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் பறிகொடுத்துள்ளார். அதேபோல், டிக் டாக்கில் பழகிய நபரால் தனித்து வாழும் தாய் ஒருவர் தனது சேமிப்பு மற்றும் தனிநபர் கடன் மூலம் 60,500 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வதில்லை. தொடக்கத்தில் கேட்கப்படும் சிறு தொகைகளை அனுப்பி விட்டு, தங்களுக்கு வரவிருக்கும் பெரிய பரிசுகளுக்காகக் காத்திருப்பார்கள். தொடர்ந்து பணம் அனுப்பிய பிறகும், அடுத்தடுத்து புதிய காரணங்களைக் கூறி மோசடிக்காரர்கள் மேலும் பணம் கேட்கும் போது சந்தேகம் எழுகிறது.
இறுதியாக, பெண்களிடம் பணம் தீர்ந்தவுடனோ அல்லது அவர்கள் பணம் அனுப்ப மறுக்கும் போதோ, அந்தப் போலி நபர்கள் தங்களின் சமூக ஊடகக் கணக்குகளை நீக்கி விட்டு, தொடர்பைத் துண்டித்து மாயமாய் மறைந்து விடுவர். அப்போதுதான், தாங்கள் இத்தனை நாட்களாக ஒரு போலிப் பாச வலையில் சிக்கி, பணத்தை இழந்ததை உணர்ந்து பெண்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
இணைய உலகில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பெண்கள் பின்வரும் எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்: இணையத்தில் அறிமுகமான நபர், எவ்வளவுதான் நெருக்கமானவராக இருந்தாலும், எக்காரணத்தைக் கொண்டும் (மருத்துவச் செலவு, சுங்க வரிக் கட்டணம், வணிக முதலீடு) அவர்களுக்குப் பணம் அனுப்பக்கூடாது.
நேரில் சந்திக்க மறுப்பவர்கள் அல்லது காணொளி அழைப்புகளைத் தவிர்க்க வினோதமான காரணங்களைக் கூறுபவர்களை (எ.கா: வெளிநாட்டு வேலை, கேமரா பழுது) முற்றிலும் தவிர்க்கவும். அவர்களின் சுயவிவரப் புகைப்படங்களை கூகுளின் மூலம் சரிபார்க்கவும். ஒரே புகைப்படம் பல பெயர்களில் இருந்தால் அது போலிக் கணக்காகும்.
புதிய உறவைப் பற்றி குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ மறைக்கக் கூடாது. மோசடிக்காரர்கள் பெரும்பாலும் இந்த உறவை இரகசியமாக வைக்குமாறு வற்புறுத்துவர். சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகள் அல்லது தொலைபேசி எண்களை, அரச மலேசிய போலீஸ் படையின் Semak Mule தளம் வழியாகச் சரிபார்த்து, அவை ஏதேனும் மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.
முக்கியத் தகவல்: நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இது போன்ற காதல் மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (National Scam Response Center - NSRC) '997' என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.








