கோலாலம்பூர், டிசம்பர்.09-
நேற்று திங்கட்கிழமை இரவு, ஜப்பானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், அங்குள்ள மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக, இது குறித்த தகவல்களைப் பெற்று வரும் வெளியுறவு அமைச்சு, அங்கு நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலைகளைக் கவனமாக ஆராய்ந்து வருவதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 11.15 மணியளவில், Aomori கடற்பகுதியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலையில், 54 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, அங்கு முதலில் சுனாமி எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு, பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மலேசியர்கள், கடற்பகுதிகளைத் தவிர்த்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும் படி வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதே வேளையில், தோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களையும், உதவிகளையும் பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில், 30-க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.








