புது டில்லி, ஜனவரி.30-
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாகப் பேணப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'விரிவான வியூக கூட்டாண்மை' என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்த உயர்மட்ட உறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளின் நீண்டகால நட்பு மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் இந்தப் பயணம் ஒரு பாலமாக அமையும் என கணிக்கப்படுகிறது.
பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா-மலேசியா இடையிலான ஒத்துழைப்பு தற்போது புதிய வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் பொருளாதாரம், Semiconductor உற்பத்தி மற்றும் பசுமை எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் பிரதமர் மோடியும் ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளனர்.
பிரதமர் மோடியின் இந்த வருகை, ஆசியான் பிராந்தியத்தில் இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையை' வலுப்படுத்துவதோடு, மலேசியாவை ஒரு முக்கிய வர்த்தகப் பங்காளியாகத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.
தவிர, கலாச்சாரம் மற்றும் மக்கள் ரீதியான தொடர்புகளில் மலேசிய இந்தியர்கள் ஆற்றி வரும் பங்கைப் பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டி வருகிறார். குறிப்பாக, மலேசியாவில் தமிழ்மொழி மற்றும் கல்வி பாதுகாக்கப்படுவதை அவர் அண்மையில் தனது Mann Ki Baat உரையில் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவின் பன்முகத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய வம்சாவளியினர் அளிக்கும் பங்களிப்பைப் பிரதமர் அன்வாரும் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறார். இந்தச் சூழலில், இரு தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது, கல்வி, சுற்றுலா மற்றும் பாதுகாப்பிற்கான புதிய திட்டங்களுக்கு வழிவகுப்பதோடு, இரு நாடுகளின் கலாச்சாரப் பிணைப்பை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.








