பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
மகாகவி பாரதியார் அன்று கண்ட கனவு மெய்ப்படத் தொடங்கியுள்ளது. "திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்று அவர் சொன்னது வெறும் வார்த்தைகளல்ல; அது தமிழின் ஆற்றலுக்கான ஒரு தீர்க்கதரிசனம். அந்தத் தீர்க்கதரிசனத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், மலேசிய மண்ணில் ஒரு தமிழ்மகள் மகத்தான சாதனை புரிந்துள்ளார். தனது மொழி ஆற்றலால், மலேசியாவிலிருந்து வெளிவந்த ஒரு சிறுகதையை திறம்படத் தமிழாக்கம் செய்து, உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆம், மாஸ்டரா எனப்படும் தென்கிழக்காசிய இலக்கிய மன்றம் எனப்படும் மொழிபெயர்ப்பு போட்டியில் வெற்றி பெற்று, நாகராணி மூர்த்தி என்ற பெயர் இன்று மொழிபெயர்ப்பு உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. அவரது இந்தச் சாதனை, பாரதி கண்ட கனவுக்கு ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது.

வெற்றி என்பது ஒரு புள்ளியில் முடிவதில்லை. அது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். நாகராணி மூர்த்தி அவர்களின் வெற்றி, வெறும் ஒரு தனிப்பட்ட நபரின் சாதனையாக மட்டுமன்றி, மலேசியத் தமிழர்களுக்கும், மொழிபெயர்ப்புத் துறைக்கும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. ஒரு பல்லின சமூகத்தில், பிற மொழிகளில் உள்ள அரிய கருத்துகளைத் தமிழுக்குக் கொண்டு வரும் பணியின் முக்கியத்துவத்தை அவரது வெற்றி உணர்த்துகிறது. ஒரு தேடலுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் அவரைப் பேட்டி கண்டோம். அவரது வெற்றிப் பாதை, எதிர்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அவரது புன்னகை, இந்தச் சாதனைக்கான கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
மாஸ்தெரா மொழிபெயர்ப்புப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு திசைகளின் வாழ்த்துகள்.
உங்கள் பின்னணியைப் பற்றி ஒரு அறிமுகம் செய்யுங்கள்
மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டப் புல மாணவி நான். சட்டம் பயின்று 8 ஆண்டு காலம் வரை வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தேன். அதன் பின்னர், சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டு EWRF எனப்படும் கல்வி, சமூகநல, ஆய்வு வாரியத்தில் இணைந்து செயல்பட்டு வந்தேன். மிகக் குறிப்பாக அந்த அமைப்பின் மாத இதழில் பணியாற்றினேன். அதன் பிறகு, மலேசிய இந்து சங்கத்தில் 2014 முதல் நிர்வாகச் செயலாளராக இருந்தேன்.
கடந்த 2024இல் இந்து சங்கத்தில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்று, மலேசிய மொழி பெயர்ப்பு, புத்தகக் கழகத்தின் மொழிபெயர்ப்புப் பயிற்சியில் கலந்து கொண்டேன். அந்தப் பயிற்சி முடிந்ததும் , மீண்டும் இந்து சங்கத்தில் நிர்வாகச் செயலாளர் பணியைத் தொடர்ந்து வருகிறேன். வழக்கறிஞராக இருந்த காலத்தில் அதிகம் மொழிபெயர்ப்பு செய்த அனுபவம் இருந்ததால், வேலையைத் தாண்டி மற்ற மொழிபெயர்ப்புகளையும் செய்து வந்தேன்.
கட்டற்றத் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் 200க்கும் மேற்பட்டக் கட்டுரைகளை இது வரையில் மொழி பெயர்த்து இருக்கிறேன். ஏறத்தாழ 90 விழுக்காடு இந்து சமயம் சார்ந்த கட்டுரைகளாக இருக்கும். மேலும், அவை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து மலாய்மொழிக்கு மொழிபெயர்த்து இருக்கிறேன்.

டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா நடத்தும் இந்த மாஸ்தெரா மொழிபெயர்ப்புப் போட்டிக்குள் நீங்கள் வந்தது எப்படி ?
மொழி பெயர்ப்புகளில் அதிகம் நாட்டமும் ஈடுபாடும் கொண்டிருந்த நான், அதற்கான பயிற்சியையும் முறையாகப் பெற்றிருந்தேன். அந்த சமயத்தில் டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா நடத்தும் இந்தப் போட்டி குறித்து தெரிய வந்ததும் அதில் பங்கு கொள்ள முயற்சித்தேன்.
மாஸ்தெரா மொழி பெயர்ப்பு போட்டிக்காக இதில் உறுப்பியம் கொண்ட அந்தந்த நாடுகளில் தலா 10 மலாய்மொழி சிறுகதைகளை அந்தந்த நாட்டு டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா ஏற்கெனவே பட்டியலிட்டு விடுவார்கள், அதில் ஒன்றானா வின்செஸ்டர் லாராஸ் டூவா – Winchester Laras Dua எனும் சிறுகதையைத் தேர்தெடுத்துதான் நான் ஆங்கிலத்தில் பேரல் அண்ட் போர் – BARREL AND BOAR என்ற தலைப்பில் மொழி பெயர்த்து போட்டிக்கு அனுப்பினேன். குறிப்பாக, வின்செஸ்டர் லாராஸ் டூவா எனும் சிறுகதையை நான் முன்னரே படித்திருக்கிறேன். எனவே, அதனைத் தேர்ந்தெடுத்ததற்கு, அதுவும் ஒரு காரணம்.
இந்தப் போட்டியில், மலேசியாவைப் பொறுத்த வரையில், போட்டிக்காகக் கிடைக்கப் பெற்ற 200க்கும் அதிகமான மொழி பெயர்ப்பு சிறுகதைகளில் 10 சிறந்த மொழி பெயர்ப்புகளைத் தேர்தெடுத்து டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா பரிசினை வழங்கும். அவற்றில் ஒரு சிறந்த படைப்பை மலேசியாவுக்கானப் படைப்பாக தேர்ந்தெடுத்து மாஸ்தெராவுக்கு அனுப்பப்படும். இந்த இரண்டிலும் என்னுடையது தேர்தெடுக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியே.
இந்த ஆண்டு அந்தப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி சிங்கப்பூர் நாடு ஏற்று நடத்தியது. மலேசியாவில் இருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், அதனை டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா எனது சார்பில் பெற்றுக் கொண்டது.

கதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியப் படைப்புகள் எனப் பார்க்கும்போது, ஒரு மொழிக்குரிய சில சிறப்புக் கூறுகளைத் தாங்கி நிற்கக் கூடியவை அவை. அவ்வாறு இருக்க, அதன் சாரம் குறையாமல் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு வரும் நிலையில், என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள். அதனை எவ்வாறு சாத்தியப்படுத்தினீர்கள் ?
இது போன்ற மொழி பெயர்ப்பில் மட்டும் அல்ல, பொதுவாகவே மொழி பெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தை மொழி மாற்றம் செய்வது மட்டும் அல்ல. ஒரு மொழியில் கூறப்படும் கருத்தை உள்வாங்கிக் கொண்டு அதனை மொழிபெயர்க்கப்படும் இன்னொரு மொழிக்கு ஏற்றவாறு, அந்த மொழியின் சிறப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு உருவாக்க வேண்டும். இங்கு, மலாய் மொழியில் ஒரு பழமொழி இருந்தால், அதனை நேரடியாகவே வார்த்தைக்கு வார்த்தை மொழி மாற்றம் செய்யக்கூடாது. அந்தப் பழமொழி எந்தச் சூழலில், என்ன உணர்வை, எவ்வாறு வெளிப்படுத்துகிறதோ, அதனை மனதில் நிறுத்தி, ஆங்கில மொழியில் இலக்கியத் தன்மைக்கு ஏற்ப மொழிபெயர்க்க வேண்டும். அப்படித்தான் இந்த வின்செஸ்டர் லாராஸ் டூவா, பேரல் அண்ட் போர் ஆக மாறியது.
வின்செஸ்டர் லாராஸ் டூவாவைப் பொறுத்த வரையில், தென் தாய்லாந்து நாட்டிற்கும் மலேசியாவின் கெடாவின் வடக்கின் இடைப்பட்டப் பகுதிக்கும் இருக்கின்ற ஒரு மக்களின் வட்டார வழக்கு மலாய் சொற்கள் மலிந்து கிடக்கும் ஒரு சிறுகதை. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முந்தையத் தலைமுறையைக் கதைக் களமாகக் கொண்டிருக்கிறது. ஆக, இடு மொழிபெயர்ப்பு செய்வதற்கு சவாலான ஒரு கதை. ஆக, மொழி பெயர்ப்பு அனுபவமும் அது சார்ந்த திறனும் இருந்தால் மட்டும் போதாது, நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டி இருந்தது. வட்டார வழக்குச் சொற்களுக்காகவே காமுஸ் பெர்டானா எனப்படும் அகராதியை டேவான் பாகாசா டான் புஸ்தாக்கா வெளியிட்டுள்ளது. இப்படி பலதரப்பட்ட துணைகளுடன் இந்தமொழி பெயர்ப்பு சாத்தியமானது.
வின்செஸ்டர் லாராஸ் டூவா என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது அதற்கு பேரல் அண்ட் போர் எனத் தலைப்பு கொடுத்தது ஏன் ?
இந்தக் கதையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடும் Winchester எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கியை கதையின் முதன்மைப் பாத்திரம் பயன்படுத்துவார். மேலும், கதையின் தன்மைக்கு ஏற்ப, நாணயத்திற்கு இன்னொரு பக்கம் இருப்பது போல் கதையில் இன்னொரு கோணத்தில் இன்னொரு பொருள் சொல்வதாக அமைத்துள்ளது. எனவே, நேரடி மொழி மாற்றம் மட்டும் செய்யாமல், இவை அனைத்தையும் குறிக்கும் வகையில் இந்தக் கதைக்கு பேரல் அண்ட் போர் எனத் தலைப்பைக் கொடுத்தேன்.

மொழி பெயர்ப்பு என வரும்போது, உங்களைப் பொறுத்த வரையில், உங்கள் வேலையில் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அது தனி துறையாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் துறையில் தடம் பதிக்க விரும்புகிறவர்களுக்கு தங்களின் ஆலோசனை என்னவாக இருக்கும் ?
இந்தத் துறையில் மிளிர விரும்புகிறவர்கள், இத்துறை சார்ந்து நன்கு பயிற்சி பெற்றுக் கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். அப்போதுதான் அதன் நுட்பங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அடுத்ததாக, அதிகம் வாசிக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் மொழிபெயர்ப்பு செய்யும்போது கருத்துகளை முறையாக மொழி மாற்றிப் படைக்க முடியும்.
உங்களைக் கவர்ந்த மொழி பெயர்ப்புப் படைப்புகள் யாவை ?
எனக்கு எனிட் பிலைட்டன் (Enid Blyton) திகில் தொடர்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, அவை மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. ஒரு மொழி பெயர்ப்புக் கதையைத்தான் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என உணரப்படாத வகையில் அந்தப் படைப்பு இருக்கும். அவை என்னைக் கவர்ந்தவை. நான் இடைநிலைப் பள்ளியில் பயிலும்போது டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா சில இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளை மலாய் மொழியில் மொழி பெயர்த்தனர். அப்படி மொழி பெயர்க்கப்பட்டவைகளில் இரபீந்தரநாத் தாகூர் சிறுகதைகளும் எனக்குப் பிடிக்கும்.
உங்கள் பார்வையில், அன்றைய கால மொழி பெயர்ப்புப் படைப்புகளையும் இன்றைய கால மொழி பெயர்ப்புப் படைப்புகளையும் ஒப்பிடும்போது, அவை எவ்வாறான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்டுள்ளன ?
இந்த விவகாரத்தில் டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. பல வெளிநாட்டு மொழிகளின் மாபெரும் படைப்புகள் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, சீன மொழி இலக்கியத்தில் புகழ்பெற்ற மங்கி கிங் காப்பியத்தை முழுமையாக மலாய்மொழியில் தற்பொழுது கிடைக்கின்றன.
ஆனால், அதே போல் நமது பெரும் இலக்கியங்களும் காப்பியங்களும் இந்தப் பரிணாம வளார்ச்சிக்குள் இன்னும் வர வில்லை என்பதே வருத்தமளிக்கும் செய்தியாகும். மலாய் மொழியில் பெரும்பாலும் திருக்குறலும் பகவத் கீதையும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. தற்பொழுது ஒரு குழுவினர் திருமந்திரத்தை மொழி பெயர்ப்பதாக அறிகிறேன். தமிழ்நாட்டு அரசாங்கம் இவ்வாறான மொழி பெயர்ப்புகளுக்கு நிதி ஒதுக்கீடும் வழங்குகின்றன. ஆனால், மலேசியாவில் நம்மவர்கள் அதனை இன்னும்முழுதாய் பயன்படுத்திக் கொள்வதில் ஒரு சுணக்கம் இன்னும் இருந்து வருகிறது.
உலக மொழிகளில் உள்ள முக்கிய நூல்களும் படைப்புகளும் தமிழ் மொழிக்கு வருகிறதா என்பதும், தமிழ்மொழி படைப்புகள் மற்ற மொழிக்குச் செல்வதும் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கின்றன. இன்னோர் எடுத்துக்காட்டு, நமக்கு நன்கு அறிமுகமான ஹேரி போட்டர். இந்தக் கதை எட்டு புத்தகங்களையும் மலாய் மொழி உட்பட 100 மொழிகளில் பதிப்புகளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனல், தமிழில் 2 பாகங்கள் மட்டுமே வெளி வந்திருக்கின்றன. அதிலும் எண்ணிக்கையில் மிகக் குறைவு
ஆக, மற்ற நூல்களைக் காட்டிலும், கதைகளையும் நாவல்களையும் மூல மொழியில் இருந்து மற்ற மொழிக்குக் குறிப்பாக தமிழ் மொழிக்குக் கொண்டு வருவதில் சில மொழியியல், இலக்கியச் சிக்கல் இருக்கலாம். அதனால், தமிழில் மற்ற மொழி இலக்கியப் படைப்புகள் குறைவாகப் படைக்கப்பட்டிருக்கலாம், அல்லவா ?
சவால் இருக்கின்றது உண்மையாதான். ஆனால், முடியாதது அல்ல என்பது என் கருத்து. அவ்வாறான முயற்சியில் இறங்கும்போது, இரண்டு மொழிகளின் புலமையும் அவற்றின் சூட்சமும் தெரிந்திருக்க வேண்டும், அவ்வாறு சாத்தியமாகும்போது, ஒரு சில சமயங்களில் மூல மொழிப் படைப்பைக் காட்டிலும் மொழிபெயர்ப்புப் படைப்பு இன்னும் சிறப்பாக அமையவும் வாய்ப்புகள் இருக்கின்றதை மறுக்க முடியாது.
சில நூல்கள், குறிப்பாக, நாவல்களில் அட்டைப் படத்திலேயே இது மொழி பெயர்ப்பு நாவல் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரே நாவலின் மூல மொழியில் வெளி வந்ததையும், மொழி பெயர்ப்பாகப் படைக்கப்பட்டதையும் ஒரு வாசகர் எவ்வாறு எதிர்கொள்கிறார் ?
அஃது அவரின் வாசிக்கும் பழக்கத்தையும் அவர் வாசிப்பின் நோக்கத்தையும் பொறுத்து அமையும். எடுத்துக்காட்டுக்கு, நான் விவேகானந்தரின் நூல்களை முதலில் தமிழில்தான் படித்தேன். சிலகாலம் கழித்து, அதன் மூல மொழி ஆங்கிலம் என அறிந்தேன். மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், அந்நூல் ஒரு தாக்கத்தை நமக்குக் கொடுக்கும் வல்லமை கொண்டது. எனவே, ஆங்கிலத்தில் என்ன வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார், எவ்வாறான சொற்களைக் கையாண்டிருப்பார் எனும் ஆர்வம் எனக்குள்ளே எழவே, ஆங்கிலத்திலும் அந்நூலைப் படித்தேன்.
ஆக, நமது வாசிப்பின் நோக்கம் தகவல் அறிவது என்றால், மொழி பெயர்ப்பு நூல்களே நம்மை திருப்தி பட வைத்து விடும். ஆனால், நமது வாசிப்பின் நோக்கம் வேறாக, தகவல் தேடலாக இல்லாமலிருந்தால், நிச்சயம் மொழி பெயர்ப்பு நூலோடு நிற்காமல் மூல மொழி பதிப்பைத் தேட வைக்கும். அப்படி மூல மொழி நூலைத் தேடுபவர்கள் அந்த மொழியில் ஆளுமை பெற்றிருத்தலும் அவசியமாகும்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
இது பாரதியார் சொன்ன வரிகள். அறிவுத் தேடலுக்காக, மானுடம் பயன்பெற பிறநாட்டு ,பிறமொழிப் படைப்புகள் தமிழ் மொழியில் இயற்றப்பட வேண்டும் என அப்போதே சொல்லிவிட்டார். ஆனால், அதன் செயல் வடிவம் தற்போதைய நிலையில் சற்றே மந்தமாகி இருக்கின்றது. ஆனால், அதை ஒரு வகையில் புரிந்து கொண்ட மலேசிய மொழி பெயர்ப்பு, புத்தகக் கழகமும் டேவான் பாஹாசா டான் புஸ்தாக்காவும் மாலாய் மொழியில் உலகப் படைப்புகளைக் கொண்டு வந்து மலேசிய மண்ணில் சேர்க்கும் சீறிய பணியில் இறங்கி இருக்கிறார்கள்.
இறுதியாக, டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா என்றாலே மலாய் மொழிக் காப்பகமாக இருக்கின்றது. அதன் போட்டிகளில், நடவடிக்கைகளில் இந்தியர்களின் பங்கேற்பு மிக மிக க் குறைவு எனும் கருத்து சமூகத்தில் நிலவி வருகிற நிலையில், ஓர் இந்தியப் பெண்மணி நீங்கள், பங்கேற்பைத் தாண்டி வெற்றியாளராக இருக்கிறீர்கள். இந்த அரிய பயணம் சாத்தியமான இரகசியம் என்ன ?
இதில் இரகசியம் ஒன்றும் இல்லை. எனக்கு டேவான் பாஹாசா டான் புஸ்தாக்காவினோடு எந்தவித நேரடித் தொடர்பும் கிடையாது. அவர்கள் இது போன்று பல போட்டிகளை ஏற்பாடு செய்கிறார்கள். அவர்கள் மட்டும் அல்ல, நிறைய அமைப்புகள் பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்கின்றார்கள். அதில் நம்மவர்களின் பங்கேற்பு சற்று குறைவாகவே இருக்கின்றது. பங்கேற்பு அதிகரித்தால், நிச்சயம் வெற்றி வாய்ப்பும் அதிகம். அதற்கு முன் பயிற்சியும் விடா முயற்சியும் மிக மிக அவசியம்.
--------------------
நாகராணி மூர்த்தியின் வெற்றி, மலேசியத் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. வழக்கறிஞராகத் தொடங்கி, சமூகப் பணி வழியாக மொழிபெயர்ப்புத் துறைக்குள் நுழைந்து, மாஸ்தெரா போட்டியில் அவர் பெற்ற வெற்றி, கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது. விக்கிப்பீடியாவில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை மொழிபெயர்த்த அவரின் அற்பணிப்பு, மொழிபெயர்ப்பு என்பது வெறும் வார்த்தை மாற்றம் அல்ல, அது ஒரு கலை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. உலகப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதிலும், தமிழ்ப் படைப்புகளை உலக மொழிகளுக்குக் கொண்டுச் செல்வதிலும் உள்ள சவால்களை அவர் சுட்டிக் காட்டியது. இத்துறையில் நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதைப் புலப்படுத்துகிறது. நாகராணியின் இந்தச் சாதனை, பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் ஒரு தொடக்கமாக அமைவதோடு, எதிர்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு உத்வேக சக்தியாகவும் திகழ்கிறது.
மாஸ்தெராவின் பின்னணி
1996ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்ட இந்த மாஸ்தெராவில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, புருனெய், சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளின் டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா மொழி அமைப்புகள் அங்கத்துவம் பெற்று வருகின்றன. அந்நாடுகளின் மலாய்மொழி, இந்தோனேசிய மொழி, இலக்கியக் காப்பகமாக அது விளங்குகிறது.
~குமரன்~








