Oct 24, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் மறைந்து வரும் தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பும் கலாச்சாரம்
கட்டுரை

மலேசியாவில் மறைந்து வரும் தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பும் கலாச்சாரம்

Share:

தீபாவளி சிறப்பு மலர் கட்டுரை

மலேசியாவின் பல்லின சமூகத்தில், தீபாவளி என்பது வெறும் ஒரு கொண்டாட்டமல்ல; அஃது உறவுகளையும் நட்பையும் புதுப்பிக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. பல தசாப்தங்களாக, இந்த கொண்டாட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது தீபாவளி வாழ்த்து அட்டை (Deepavali greeting card) அனுப்பும் வழக்கம். ஆனால், இப்போது அந்த அழகிய பாரம்பரியம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் வெறும் ஒரு கலாச்சார இழப்பு மட்டுமல்ல, தொழில்நுட்பத்தின் ஆதிக்கமும் நவீன வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பும் ஆகும்.

வாழ்த்து அட்டைகளின் பொற்காலம்

1980கள், 1990களில், மலேசியாவில் தீபாவளி வாழ்த்து அட்டைகள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தன. குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என் அனைவரின் மத்தியில் அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்ள வாழ்த்து அட்டைகளே முதன்மை ஊடகமாக இருந்தன.

கடைகளில் வண்ணமயமான, மின்னும் வடிவங்களில் கிடைக்கும் வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுப்பதும், அதில் கையால் அழகான கையெழுத்தில் வாழ்த்துக்களை எழுதுவதும் ஒரு தனி மகிழ்ச்சியைக் கொடுத்தது. சிலர் வீட்டிலேயே அட்டைகளை வடிவமைத்து, அதில் தனிப்பட்டத் தொடுதலைச் சேர்த்தனர். இந்த அட்டைகள் வெறும் காகிதத் துண்டுகள் அல்ல; அவை அன்பின் வெளிப்பாடுகளாக, பரிசுகளாகவே கருதப்பட்டன.

சில சமயம், பள்ளிகளில் கூட தீபாவளி வாழ்த்து அட்டைகள் விற்கப்பட்டன. அப்போது வெளிவந்த சில திரைப்படங்களின் தாக்கத்தால், கதாநாயகர்களின் உருவப் படம் போட்ட தீபாவளி வாழ்த்து அட்டைகளும் பள்ளி மாணவர்களிடையே புகழ் பெற்றிருந்தன. அவை அனுப்புவதற்காக வாங்கப்படுவதில்லை. தாங்களே வைத்துக் கொள்வதற்காக...

தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பு, அஞ்சல் நிலையங்கள் (Pos Malaysia) வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்காக மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த காலமும் அந்நாளில் உண்டு. மலேசியாவின் கிராமங்கள், நகரங்கள், ஏன் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கும் அட்டைகள் சரியான நேரத்தில் சென்று சேர வேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது.

இந்த வழக்கம், மக்களை அனைவரையும் இணைக்கும் ஒரு சமூக சடங்காகவே இருந்தது. அஞ்சல் நிலைய ஊழியர்களுக்கும் இஃது ஒரு திருவிழா காலம்தான். வாழ்த்து அட்டைகளை வரிசைப்படுத்தி, முத்திரை குத்தி, சரியான நேரத்தில் விநியோகிப்பதில் அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, இந்த கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

 

அந்தக் காலக் கட்டத்தில், குறிப்பாக தீபாவளி நெருங்கும் சமயத்தில், தெரு முனையில் போஸ்மேன் மோட்டார்சைக்கிள் வரும் சத்தம் கேட்டாலே, சிறுவர்கள் வீட்டு வாசலில் துள்ளிக் குதித்து ஓடிப் போய் நின்று அந்த போஸ்மேன் தங்களின் வீட்டிற்கு வாழ்த்து அட்டைகளைக் கொண்டு வரமாட்டாரா என ஏங்குவர். இன்னும் ஒரு மேலே போய், அந்த போஸ்மேன் கொண்டு வந்த வாழ்த்து அட்டையைத் தாங்களே நேரடியாக கையால் பெற்று விட்டால், பூரிப்புக்குச் சொல்லவா வேண்டும் ?

இன்னும் சில அனுப்புநர், அந்த வாழ்த்து அட்டையின் உறையின் ஏதாவது ஒரு பகுதியில், அதனைக் கொண்டு செல்லும் போஸ்மேனுக்கு நன்றியைத் தெரிவித்து இந்த மகிழ்ச்சியில் அவர்களையும் இணைத்துக் கொள்ளும் வழக்கத்தை மறக்க முடியுமா ?

 

தீபாவளியை நோக்கியத் தயார்நிலைப் பயணத்தில், வீட்டு அலங்காரத்திலும் இந்த தீபாவளி வாழ்த்து அட்டைகள் நிச்சயமாக இடம் பிடிக்கும். அதிலும் குறிப்பாக, 2க்கும் மேற்பட்டப் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் ஆளுக்கு ஒரு சுவரைக் குத்தகைக்கு எடுத்து தங்களுக்கு வந்த தீபாவளி வாழ்த்து அட்டைகளை வகை வகையாக ஒட்டி அலங்கரிப்பர். அது மட்டுமா, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அதனைக் காட்டி உச்சிக் குளிர்ந்து போவதில் அவர்களுக்கு ஒரு தனி இன்பம்.

தொழில்நுட்பப் புரட்சியும் வாழ்த்து அட்டைகளின் வீழ்ச்சியும்

2000களின் தொடக்கத்தில், தொழில்நுட்பத்தின் வருகை இந்த பொற்காலத்தை மெல்ல மாற்றியமைக்கத் தொடங்கியது. முதலில் குறுஞ்செய்திகள் (SMS), பின்னர் மின்னஞ்சல்கள் (Emails),  மின்னியல் வாழ்த்து அட்டைகள் (e-cards) அறிமுகப்படுத்தப்பட்டன. இவை உடனடியாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகுத்தன.

ஆனால், உண்மையான மாற்றம், விவேகக் கைப்பேசிகள் வருகைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. இன்று, தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாற வாட்ஸ்அப் (WhatsApp), முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), டெலிகிராம் (Telegram) போன்ற சமூக ஊடகங்களே பிரதானமாக இருக்கின்றன.

வாழ்த்து அட்டைகளை எது இப்போது மாற்றியமைக்கிறது?

இப்போது, வாழ்த்து அட்டைகளுக்குப் பதிலாக, இந்த நவீனத் தொழில்நுட்பங்கள் புதிய வடிவங்களில் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறப் பயன்படுத்தப்படுகின்றன. தீபாவளி வாழ்த்துச் செய்திகள், GIFகள், மீம்ஸ்கள், வீடியோக்கள் ஆகியவை நொடிப்பொழுதில் தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் வீடியோ அழைப்புகளில் பேசும் போது நேரடியாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது தற்போது அதிகரித்துள்ளது. அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய தீபாவளி மின்னியல் வாழ்த்துப் படங்களும்  வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை இலவசமாகவும், உடனடியாகவும் கிடைக்கின்றன.

 

இந்த நவீன முறைகளின் மிகப் பெரிய நன்மை, அவற்றின் வேகம் வசதியாக இருக்கின்றன. ஒரு நிமிடத்திற்குள் நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை அனுப்பி விடலாம். அஞ்சல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, தபால் செலவு இல்லை, அட்டைகளைத் தேடித் அலையவும் வேண்டியதில்லை. தவறான முகவரிக்கு தவறுதலாக அனுப்பப்படாது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் இந்த கலாச்சார மாற்றத்தில் ஒரு பங்கு வகிக்கின்றன. காகித உற்பத்தியினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்தது. மக்கள் சமூக தொடர்புகளுக்கு டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

 

பொருளாதார அழுத்தங்களும் ஒரு காரணம். வாழ்த்து அட்டைகள், தபால் கட்டணங்கள், போக்குவரத்து செலவுகள் ஆகியவை ஒரு குடும்பத்தின் தீபாவளி செலவில் ஒரு சிறு பகுதியைச் சேர்த்தன. இன்று, இந்த செலவுகள் முழுவதுமாக தவிர்க்கப்படுகின்றன.

வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் மறைந்து வருவது, ஒரு சில கலாச்சார இழப்புகளை ஏற்படுத்துகிறது. கையால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டையில் இருக்கும் உணர்வுப்பூர்வமான தொடுதல், ஒரு சமூக ஊடகச் செய்தியில் இருப்பதில்லை. வாழ்த்து அட்டைகள் தனிப்பட்ட உறவுகளைப் பிரதிபலித்தன.

வாழ்த்து அட்டைகள் பல ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைக்கப்பட்டன. அவை நினைவுகளின் கருவூலங்களாக இருந்தன. ஆனால், இப்போது பகிரப்படும் டிஜிட்டல் செய்திகள் ஒருசில நாட்களிலேயே காணாமல் போய் விடுகின்றன அல்லது மறந்து விடுகின்றன.

 

மலேசியாவில் வாழ்த்து அட்டை அனுப்பும் பாரம்பரியம் முற்றிலுமாக மறைந்து விட்டது என்று சொல்ல முடியாது. இன்றும் ஒரு சிலர், தங்களின் மிக நெருங்கிய உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதைக் காணலாம். ஆனால், இஃது ஒரு பொதுவான வழக்கமாக இல்லை.

தீபாவளி வாழ்த்து அட்டை கலாச்சாரத்தின் வீழ்ச்சி, உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சியின் ஒரு பகுதியாகும். இது ஒருதலைபட்சமான நல்லது அல்லது கெட்டது அல்ல. இது வாழ்க்கை முறையின் இயல்பான பரிணாமம். இருந்தாலும், அந்த நாட்களில் நாம் உணர்ந்த தனிப்பட்ட அன்பையும், தபால் பெட்டி திறக்கும்போது கிடைத்த எதிர்பார்ப்பையும், கையால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டையின் மதிப்பையும் நினைவு கூர்வது, ஒரு இனிய நினைவாக எப்போதும் இருக்கும்.

இந்த மாற்றம், நாம் வாழும் சமூகத்தின் வேகத்தையும், தொழில்நுட்பத்தின் சக்தியையும் பிரதிபலிக்கிறது. வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் மறைந்து விட்டாலும், தீபாவளி பண்டிகையின் மையக்கருவான அன்பு, ஒற்றுமை, உறவுகளைப் புதுப்பித்தல் ஆகிய உணர்வுகள் என்றும் நிலைத்து நிற்கும்.

~குமரன்~

Related News