சென்னை, மார்ச் 13: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டது தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த மார்ச் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக வருகை தந்தனர். இருவரும் மேடைக்குச் சென்று புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, புகைப்படங்களுக்கும் ஒன்றாகவே போஸ் கொடுத்தனர். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, இவர்கள் இருவர் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகை திரிஷாவின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டபோது, இயக்குனர் பார்த்திபன் "குந்தவையை சில நாட்கள் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும், வெளியே விடக்கூடாது" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "மைக் பிடித்துவிட்டால் ஒரு கருத்து அறிவுப்பூர்வமானதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்லும். தெளிவில்லாத முதிர்ச்சியற்ற வார்த்தைகள் பேசுபவரின் குணத்தையே காட்டும்" என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மகாபலிபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பேசிய விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகும் செய்திகளால் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். "சமீபகாலமாக சில பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அதற்காக நீங்கள் சண்டையிட்டு காயப்படுவதைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தமாக இருக்கிறது. அந்தப் பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்வேன், நீங்கள் கவலைப்படாதீர்கள். அது எதற்கும் தகுதியற்றது என்று அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக ஒரு புகைப்படம் பரவியது. ஆனால், அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் ஒருபுறம் இருக்க, திரிஷா மற்றும் விஜய் இடையிலான இந்த நட்பு அல்லது நெருக்கம் அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.








