சென்னை: நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ள 'மேட் இன் கொரியா' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
படத்தில் 'செண்பா' என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ள பிரியங்கா, படப்பிடிப்பிற்காக 40 நாட்களுக்கும் மேலாக தென்கொரியாவில் தங்கியிருந்தார். அங்கு நிலவிய கடும் வானிலை மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, உணவுப் பிரச்சினைதான் தமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். "கொரிய உணவுகளில் பெரும்பாலும் சிவப்பு இறைச்சி சேர்க்கப்படுவதால், என்னைப் போன்றவர்களுக்கு உணவு கிடைப்பது கடினமாக இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரியக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் எளிமை தமக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது ஒரு பிரிந்து செல்லும் உணர்வை சந்தித்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ர. கார்த்திக் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் ரசிகர்களின் பார்வைக்குக் கிடைக்கிறது.








