Sep 25, 2026
Thisaigal NewsYouTube
'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி
சினிமா

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

Share:

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான 'பெட்டி' திரைப்படத்தில், ஜான்வி கபூரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு சனா மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், அதற்கு அந்தப் படத்தின் பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியான ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா திரைப்படமான 'பெட்டி' பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இருப்பினும், இந்தத் திரைப்படத்தில் ஜான்வி கபூர் ஏற்று நடித்த 'அச்சியம்மா' என்ற பெண் கதாபாத்திரம் அளவுக்கு அதிகமாகக் கிளாமராகக் காட்டப்பட்டதாகவும், கேமரா கோணங்கள் மற்றும் சில காட்சிகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, கதாநாயகன் பெண்ணின் சம்மதமின்றி முத்தமிடும் ஒரு காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட இயக்குநர் புச்சி பாபு சனா, யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறி மன்னிப்பு கேட்டதுடன், சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கப்போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், படத்தின் வெற்றிக் கொண்டாட்ட விழாவில் பேசிய பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம், இயக்குநர் மன்னிப்பு கேட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் பேசும் சில பட்டதாரிகளின் கருத்துகளுக்கும், ட்ரோல்களுக்கும் பயந்து ஒரு படைப்பாளி தனது கற்பனைச் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று அவர் வாதிட்டார்.

பழங்குடிப் பின்னணி கொண்ட ஒரு கிராமத்து நாயகன் தனது காதலை வெளிப்படுத்தும் விதத்தை ஆபாசம் என்று கூறுவது படைப்புச் சுதந்திரத்தை நசுக்குவதற்குச் சமம் என்று குறிப்பிட்ட அவர், "இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஆவணப்படங்களை மட்டுமே எடுக்க முடியும், சிறந்த வணிகப் படங்களை உருவாக்க முடியாது; நமது படைப்புச் சுதந்திரத்திற்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News