கோலாம்பூர், ஜனவரி,27-
ஹரிமாவ் மலாயா அணியைச் சேர்ந்த, தடை செய்யப்பட்ட 7 கலப்பு பாரம்பரிய கால்பந்தாட்ட வீரர்களும், மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் அந்த 7 வீரர்களின் விண்ணப்பங்களை, விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றமான CAS ஏற்றுக் கொண்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 7 வீரர்களுக்கு எதிராக உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா வழங்கிய 12 மாத இடைக்காலத் தடை உத்தரவானது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டின் மீதான இறுதி முடிவை CAS எடுக்கப்படும் வரை, அவர்கள் தங்கள் கால்பந்தாட்டங்களைத் தொடரவும், அது தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த 7 வீரர்களை களமிறக்க ஃஎப்ஏஎம் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த ஏழு பாரம்பரிய வீரர்களின் தாத்தா பாட்டி மலேசியாவில் பிறந்ததாகக் கூறும் ஃஎப்ஏஎம் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக் குழு குற்றஞ்சாட்டியது.
இதனையடுத்து உலக கால்பந்து அமைப்பின் விசாரணையில், அசல் பதிவுகளில் அந்த 7 வீரர்களும் ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரேசில், நெதர்லாந்தில் பிறந்ததாக அம்பலமானது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த விசாரணையில், ஃஎப்ஏஎம் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து, ஃபிஃபா அந்த 7 வீரர்களுக்கு 12 மாதங்கள் விளையாடத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.








