கோலாலம்பூர், ஜனவரி.29-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவில் 7 வெளிநாட்டுக்கார ஆட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடியைத் தொடர்ந்து, மலேசிய கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஒட்டுமொத்த நிர்வாகிகளும் நேற்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஆட்டக்காரர்களின் மூதாதையர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கண்டறிந்ததைத் தொடர்ந்து, இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக கால்பந்து சம்மேளனத்திலிருந்து நாட்டின் பிரதான கால்பந்து சங்கமான ஃஎப்ஏஎம் இடை நீக்கம் செய்யப்படுவதை தவிர்க்க அதன் பொறுப்பாளர்கள் கூண்டோடு பதவி விலகியுள்ளதாக நம்பப்படுகின்றது.
சங்கத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்காகவும், மேலும் பாதகமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக ஃஎப்ஏஎம் இடைக்காலத் தலைவர் யுசோஃப் மஹாடி தெரிவித்துள்ளார்.








