ஜகார்த்தா, ஜனவரி.17-
இந்தோனேசிய ஏர் டிரான்ஸ்போர்ட் (IAT) நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக விமானம் ஒன்று, இன்று யோக்யகர்த்தாவிலிருந்து (Yogyakarta) மக்காஸர் (Makassar) நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது ராடார் திரையிலிருந்து மறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
PK-THT என்ற பதிவு எண் கொண்ட ஏடிஆர் 42-500 (ATR 42-500) ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் எட்டு பணியாளர்கள் மற்றும் மூன்று பயணிகள் என மொத்தம் 11 பேர் இருந்ததாக அன்தாரா நியூஸ் (Antara News) செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு சுலாவேசி மாநிலத்தில் மாரோஸ் மாவட்டத்தில் உள்ள லியாங்-லியாங் வான்வெளியைக் கடந்தபோது, விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த விமானம் இழந்ததாக இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவசரத் தகவல் கிடைத்தவுடன், விமானம் கடைசியாகக் காணப்பட்ட இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக மக்காஸர் பசார்னாஸ் (Basarnas) செயல்பாட்டுப் பிரிவின் தலைவர் ஆண்டி சுல்தான் தெரிவித்துள்ளார்.








