தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரும் "இயக்குநர் இமயம்" எனப் போற்றப்பட்டவருமான பாரதிராஜா, சென்னையில் இன்று, தமது 84-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவு செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1977-ஆம் ஆண்டு, கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில், "16 வயதினிலே" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான அவர், கிராமிய வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கினார்.
அதன் பின்னர், "கிழக்கே போகும் ரயில்", "முதல் மரியாதை", "கருத்தம்மா" உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி, எண்ணற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத முத்திரை பதித்த அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என பலரும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.








