இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் தனுஷ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இணைந்து நடித்து வரும் 'ஓம்: சாப்டர் 1' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் தொடங்கியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மலேசியாவில் தனுஷ் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் கையெழுத்திடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஸ்ரேயாஸ், மலேசியாவின் இரட்டை கோபுரப் புகைப்படத்தைப் பகிர்ந்து 'ஓம் இறுதிப் படப்பிடிப்பு' எனப் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவில் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் மெகாஸ்டார் மம்மூட்டி ஐந்து நாட்கள் மட்டும் பங்கேற்கவுள்ளதாகவும், நடிகர் தனுஷ் மற்றும் அண்மையில் இப்படத்தில் இணைந்த பாலிவுட் மூத்த நடிகர் நஸீருதீன் ஷா ஆகியோர் முழுப் படப்பிடிப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு நஸீருதீன் ஷா நடிக்கும் தமிழ் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.








