கோலாலம்பூர், பிப்ரவரி.24-
தமிழகக் கலைஞர்களுடன், மலேசிய கலைஞர் சிவா வில்லனாக நடித்திருந்த ‘குருதியின் யுத்தம்’ என்ற குறும்படம் மலேசிய மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
பேராக் மாநிலம், சித்தியவானில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை அப்படமானது திரையிடப்பட்டது.

எஸ் சுதன் ஜி புரொடக்க்ஷன் தயாரிப்பில், இளம் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், தமிழகக் கலைஞர்கள் கொட்டாச்சி, பாலு, தீபா, கிச்சா ஆகியோருடன் சித்தியவானைச் சேர்ந்த மண்ணின் மைந்தன் பிளாக் சிவா, இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ரஞ்சித், தனது முதல் படமான குறுதி யுத்தத்தை மலேசியாவில் திரையிடுவது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் கலைஞரான தனக்கு உதவும் வகையில் சிவா இப்படத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில், இக்குறும்படத்தை மெருகேற்றி முழு நீள திரைப்படமாகவும் உருவாக்க திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்குறும்படத்தின் திரையிடலின் போது, தமிழகத்தின் புகழ் பெற்ற மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நடிகர்கள் கொட்டாச்சி, தீபா உட்பட அனைவரும் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இக்குறும்படத்தை தயாரித்திருப்பதோடு, வில்லனாகவும் களமிறங்கியிருக்கும் மலேசியக் கலைஞரான சிவா, கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்திற்குத் தான் சென்று வருவதையும், அங்குள்ள கலைஞர்களுடன் தனக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பையும் விவரித்தார்.
இத்திரைப்படத்திற்கு தானும், தனது குழுவினரும் முழு அர்ப்பணிப்பை வழங்கியுள்ளதாகவும், மக்கள் இதற்கு முழு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகர் கொட்டாச்சி நடித்துள்ளார். குறும்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் கூட, குருதியின் யுத்தம் என்ற இக்குறும்படம் நிச்சயமாக மக்கள் மனதைத் தொடும் என்று அவர் தெரிவித்தார்.
அதே வேளையில், இக்குறும்படத்தை படக்குழுவினருடன் சித்தியவானைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கண்டு களித்தனர்.
அவர்களில் வசந்தி என்பவர் இத்திரைப்படத்தையும், அதில் நடித்துள்ள நடிகர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.
முழுக்க முழுக்க தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்குறும்படமானது OTT தளங்களில் விரைவில் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இக்குறும்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.








