Aug 28, 2026
Thisaigal NewsYouTube
  மித்ரா மூலம் 168 ஆலயங்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதி... 4,000 சிறுவர்களுக்கு கல்வி மானியம் – அமைச்சர் ரமணன் தொடங்கி வைத்தார்
அரசியல்

மித்ரா மூலம் 168 ஆலயங்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதி... 4,000 சிறுவர்களுக்கு கல்வி மானியம் – அமைச்சர் ரமணன் தொடங்கி வைத்தார்

Share:

இந்திய சமூகத்தின் ஆன்மீக அடையாளத்தைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும், மடானி அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

செரம்பான் நகரில் உள்ள விஸ்மா சிலோனீஸ்-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், 168 இந்து ஆலயங்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி திட்டத்தையும், B40 குடும்பங்களைச் சேர்ந்த 4,000 சிறுவர்களுக்கான கல்வி மானியத் திட்டத்தையும், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அடித்தட்டு மக்களின் முன்னேற்றமே டானி அரசாங்கத்தின் நோக்கம் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த நிதியுதவிகள் நேரடியாக பயனாளிகளிடம் சென்றடையும் திட்டங்களாக அமைகின்றன.

4 முதல் 6 வயதுக்குட்பட்ட 4,000 சிறுவர்களுக்கு கல்வி மற்றும் ஊட்டச்சத்து ஆதரவாக, மாதந்தோறும் தலா 230 ரிங்கிட் வழங்கப்படுகிறது. இதில் 150 ரிங்கிட் கல்விக் கட்டணத்திற்கும், 80 ரிங்கிட் உணவுத் தொகைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும், சமூகப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கும் 168 ஆலயங்களுக்கு மொத்தம் 3.36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை, மொத்தம் 627 ஆலயங்களுக்கு 12.54 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக மேம்பாட்டின் மையங்களாகவும் செயல்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை தர்மப் பணியாகக் கருதி, முழுப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்துமாறு ஆலய நிர்வாகிகளுக்கு ரமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், மனிதவள அமைச்சின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ஹாஜி முகமது ஷஹாரின் பின் உமர், மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர், சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் குமார் மற்றும் குணசேகரன், செனட்டர் தியாகராஜா ராஜகோபால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

2023-ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்திற்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து பயனளித்து வருவதாகவும், 2025-ஆம் ஆண்டில் மட்டும் எஸ்.டி.ஆர் மற்றும் சாரா திட்டங்கள் மூலம் இந்திய சமூகத்திற்கு சுமார் 1 பில்லியன் ரிங்கிட் நிதி சென்றடைந்துள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.

மேலும், சமூகத்தைப் பிளவுபடுத்தும் வதந்திகளைப் புறந்தள்ளி, நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் மடானி அரசாங்கத்தின் நீண்டகால வளர்ச்சிப் பயணத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.

Related News