டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய வீரர்கள் ஒரு மாத ஓய்வில் இருக்கிறார்கள். இந்த ஓய்வின் போது வீரர்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை ஏற்கனவே இந்திய அணி வெளியிட்டதோடு, இந்திய வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெளியிட்டது. அக்.5ஆம் தேதி உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், நவ.19ஆம் தேதி உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கு முன் இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிடப்பட்டு வருகிறது.