சீனாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹோங்சூ நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஏற்கனவே 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளின்போது இந்திய அணியை பிசிசிஐ அனுப்பாமல் இருந்தது. இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே முன்கூட்டியே போட்டி அட்டவணைகள் தயாரிக்கப்பட்டிருந்ததால் ஆசிய போட்டிகளை இந்திய அணி தவிர்த்திருந்தது.
இதற்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டேபார் மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நெருக்கடியான சூழலிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்கும் என்ற அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் இந்தியாவின் இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ.