கோலாலம்பூர், ஜனவரி.26-
மலேசியாவின் முன்னாள் பேட்மிண்டன் ஜாம்பவானும், உலகத்தரம் வாய்ந்த இரட்டையர் ஆட்டக்காரருமான டத்தோ டான் யீ கான், இன்று தனது 85-வது வயதில் காலமானார்.
1967-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தாமஸ் கிண்ணத்தை மலேசியாவிற்காக வென்று கொடுத்த இந்த ஜாம்பவானின் மரணத்தை, மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ வி.சுப்ரமணியம் உறுதிப்படுத்தினார்.
டத்தோ டான் யீ கானின் மறைவு மலேசிய பேட்மிண்டன் துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரிய இழப்பாகும் என்று சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
1960-களின் தொடக்கத்தில் மலேசிய பேட்மிண்டன் விளையாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் ஜாம்பவானை நாம் இழந்து விட்டோம். மலேசிய பேட்மிண்டன் சங்கம் சார்பில் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
1960-களில் டத்தோ டான் யீ கான் மற்றும் மறைந்த ங் பூன் பீ இணையர், உலகிலேயே மிகவும் அஞ்சப்படும் மற்றும் வலிமையான இணையாகத் திகழ்ந்தனர்.
அவரது அர்ப்பணிப்பும் சாதனைகளும், எதிர்கால பேட்மிண்டன் வீரர்கள் உலக அரங்கில் ஜொலிப்பதற்குப் பெரும் உத்வேகமாகவும் அடித்தளமாகவும் அமைந்தன.
தாமஸ் கிண்ண வெற்றியைத் தவிர்த்து, உலக அரங்கில் பல முக்கியப் பட்டங்களை வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்தவர் டத்தோ டான் யீ கான் என்று சுப்பிரமணியம் புகழாஞ்சலி சூட்டினார்.








