Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 2-வது சுற்றில் ஆஸ்திரேலியா
விளையாட்டு

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 2-வது சுற்றில் ஆஸ்திரேலியா

Share:

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இந்த கால்பந்து திருவிழாவில் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நேற்று நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ஜப்பான் அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் (78 சதவீதம்) வலம் வந்தாலும் அந்த அணியால் கடைசி வரை ஜப்பானின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

தொடக்கம் முதலே துடிப்புடன் தாக்குதல் பாணியை தொடுத்த ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை துவம்சம் செய்தது. ஜப்பான் அணியில் ஹினடா மியாஸ்வா 2 கோலும் (12-வது, 40-வது நிமிடம்), ரிகோ உகி (29-வது நிமிடம்), மினா தனகா (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதே பிரிவில் ஹாமில்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அறிமுக அணியான ஜாம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. முதல் 2 ஆட்டங்களில் தோற்று இருந்த ஜாம்பியா அணி உலகக் கோப்பை போட்டியில் ருசித்த முதல் வெற்றி இதுவாகும். ஜாம்பியா அணியில் லுஹோமோ மீம்பா 3-வது நிமிடத்திலும், பார்ப்ரா பாண்டா 31-வது நிமிடத்திலும், ராசெல் குடனான்ஜி கடைசி நிமிடத்திலும் கோல் போட்டனர். இதில் பார்ப்ரா பாண்டா பெனால்டி வாய்ப்பில் அடித்த கோல், ஒட்டுமொத்த பெண்கள் உலகக் கோப்பை கால்பந்தில் 1000-மாவது கோலாக பதிவானது.

'சி' பிரிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்த ஜப்பான் (9 புள்ளி) முதலிடமும், 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஸ்பெயின் (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. ஜாம்பியா (3 புள்ளி), கோஸ்டாரிகா (புள்ளி இல்லை) வெளியேறின.

Related News