வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்ட பின், முதல் முறையாக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் இடத்தில் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் மற்றும் சாஹல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆல் ரவுண்டர் வரிசையில் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அக்சர் படேல் உடன் பேட்டிங் வரிசை முடிவடைகிறது. மீதமிருக்கும் 4 வீரர்களுமே முழுமையான பந்துவீச்சாளர்கள் தான். இதனால் இந்திய அணி இன்னும் டி20 கிரிக்கெட்டை புரிந்துகொள்ளவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
முகேஷ் குமார் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு பதிலாக நடராஜன் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் தேர்வு செய்திருக்க வேண்டும். ஏனென்றால் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டு வந்த நடராஜன், அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் டெத் ஓவர்களில் நடராஜன் ஒருமுறை கூட சொதப்பவில்லை.