இந்திய இளையோர்களை விளையாட்டுத் துறையில், குறிப்பாக பூப்பந்து விளையாட்டில் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துத் தரும் உன்னத நோக்கில், பேரா மாநில இந்தியர் பூப்பந்து மன்றம் தனது 47-ஆவது ஆண்டு தேசிய அளவிலான பூப்பந்துப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
கடந்த 47 ஆண்டுகளாகத் தொய்வின்றி இப்போட்டியை முன்னெடுத்து வரும் இம்மன்றம், இவ்வாண்டு மே மாதம் 1-ஆம் தேதி தொடங்கி நேற்று மே 3 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு ஈப்போவில் உள்ள MBI விளையாட்டு வளாகமான விளையாட்டு வளாகம் MBI பூப்பந்து அரங்கில் இப்போட்டிகளை நடத்தியது.
மன்றத்தின் தலைவர் என். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து சுமார் 800 இந்திய வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டி, இந்திய சமூகத்தினிடையே மறைந்துள்ள விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
விளையாட்டுத் துறையில் இந்திய சமூகத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதுடன், இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் ஒரு முயற்சியாக இப்போட்டி தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான பூப்பந்துப் போட்டியில் இரட்டையர் பிரிவில் சிலாங்கூரை சேர்ந்த தர்ஷனா ஹரிதாஸ் – இளவரசி ராஜு இணையர் சாம்பியன் பட்டத்தை வெற்று வாகை சூடினர்.
12 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் கோலாலம்பூரை சேர்ந்த சச்சிநாகேந்திரன் மகேந்திரன் ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
தனது தந்தை முரளி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பூப்பந்தப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்பதால் தாமும் பூப்பந்து துறையில் கடந்த 7 ஆண்டு காலமாக பிணைத்துக்கொண்டதாக பினாங்கை சேர்ந்த திவ்யா முரளி தெரிவித்தார்.
தமது 6 வயதிலிருந்து பூப்பந்து விளையாடி வருவதாக சமய்ரா கவுர் மல்விந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
பூப்பந்து விளையாட்டின் வாயிலாக நமது இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே பேரா மாநில இந்தியர் பூப்பந்து மன்றத்தின் நோக்கமாகும் என்று மன்றத்தின் தலைவர் என். லோகநாதன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய உத்வேகத்துடன் நடைபெறும் பேரா மாநில இந்தியர் பூப்பந்து போட்டி, வெறும் விளையாட்டுப் போட்டியாகத் தாண்டி, இந்திய இளையோர்களிடையே ஒற்றுமையையும் விடாமுயற்சியையும் வளர்க்கும் ஒரு களமாகத் திகழ்கிறது. 47 ஆண்டுகால இந்த நெடிய பயணம், வரும் காலங்களில் இன்னும் பல தேசிய மற்றும் அனைத்துலக தரத்திலான வீரர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.











