லண்டன், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இங்கிலாந்து 325 ரன்களும் எடுத்தன. 91 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை எந்த அணியும் 350-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்ததில்லை.
அந்த வகையில் கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (29 ரன்), பென் டக்கெட் (50 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 257 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள் 'பவுன்சர்' பந்துகளை அதிகமாக வீசி இடைவிடாது குடைச்சல் கொடுத்தனர். ஸ்கோர் 177 ஆக உயர்ந்த போது டக்கெட் 83 ரன்களில் (112 பந்து, 9 பவுண்டரி) ஹேசில்வுட்டின் 'ஷாட்பிட்ச்' பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (10 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் வீழ்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து ஸ்டூவர்ட் பிராட் இறங்கினார்.