மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றதன் மூலமாக தனது 21 ஆண்டுகால வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர், இராணி கோப்பை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சையத் அலி முஷ்டாலி அலி தொடர் என்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இதனால் விரைவில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 21 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எங்கு பெயர் தெரியாத இடத்தில் டென்ட் அமைத்து கிரிக்கெட் பயிற்சி பெற்ற சிறுவன், அன்றாட செலவுகளுக்காக பானி பூரி விற்ற இளைஞன், இன்று இந்திய டெஸ்ட் அணிக்காக களமிறங்கப் போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.