ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' மற்றும் இந்தியா மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்னும் ஒரு சில நாட்களில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில், தற்போது இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்கிறார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இம்மாநாடு செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடர்ந்து அங்கு நடைபெறும் கிழக்காசிய மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
ஆசியான் கூட்டமைப்பு என்பது தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இருப்பினும் இந்த மாநாட்டிற்கு இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூஸிலாந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதமர்/அதிபர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதன் பெயரில்தான் இந்தியாவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.
இம்மாநாட்டில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்தது இந்தோனேசியாவை கடுமையாக பாதித்திருக்கிறது. எனவே இந்த மாநாட்டில் அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இந்தோனேசியா தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டை முடித்த கையோடு உடனடியாக பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார். ஏனெனில் ஜி20 மாநாட்டின் ஆயத்த பணகளை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.