நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்தை நம்மால் எழுத முடியவில்லையே என்று நிச்சயம் கம்ப்யூட்டரே வெட்கப்படும்.
சிறுமி பிரகிருதி மல்லா, தனது 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரது கையெழுத்தில் உருவான கடிதத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அப்போதே அந்த கையெழுத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
அந்த நோட்டில் இருந்த கையெழுத்தின் அழகைக் கண்டு நேபாள மக்கள் வியந்து பாராட்டி, பாராட்டு மழை பொழிந்தார்கள். இந்நிலையில் நேபாள மாணவி பிரகிருதி மல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாழ்த்துக் கடிதம் எழுதினார். விழாவின் போது அவர் தனிப்பட்ட முறையில் கடிதத்தை தூதரகத்திற்கு வழங்கினார்.
இந்நிலையில் நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில் உள்ள கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்வீட் பெரிய அளவில் வைரல் ஆகி உள்ளது. மிக நேர்த்தியான அந்த கையெழுத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.