இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அங்குள்ள ஜெயிலில் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் கூட்டணி ஆட்சியை அமைத்து பாகிஸ்தான் பிரதமரானார்.
அதன்பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் பெரும்பான்மைமையை நிரூபிக்க தவறினார். இதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக கூறப்படும் வழக்கு இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை கடந்த 5 ம் தேதி விசாரித்த நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் சிறையில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை விஷம் வைத்து கொலை செய்ய வாய்ப்புள்ளது என அவரது மனைவி புஷ்ரா பீபி அச்சமடைந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் பஞ்சாப் மாநில உள்துறை செயலாளருக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது கணவர் இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் எந்த நியாயமும் இல்லை. ஏனென்றால் அடியாலா சிறைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அவரை அட்டாக் சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும்.