May 4, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் மீண்டும் நீதிமன்றத்தில்: கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு!
உலகச் செய்திகள்

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் மீண்டும் நீதிமன்றத்தில்: கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு!

Share:

ஜகார்த்தா, மார்ச் 11-

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திட்டமாகக் கருதப்படும் 'இலவச சத்தான உணவுத் திட்டம்', மீண்டும் சட்டப் போராட்டத்தைச் சந்தித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நாட்டின் கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தோனீசிய நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

அதிபர் பிரபோவோவின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையான இத்திட்டத்திற்காக, 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் 29 விழுக்காட்டைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டின் கல்வி ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தோனீசிய அரசியலமைப்பின்படி, தேசிய பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 20 விழுக்காடு கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. தற்போது அந்த நிதியை உணவுத் திட்டத்திற்கு மடைமாற்றுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று மனுதாரர்கள் தங்கள் வாதிடுகின்றனர்.

கல்வித் துறைக்கான நிதியைக் குறைப்பது, ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டைப் பாதிக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தில் முறையான கண்காணிப்பு இல்லை என்பதையே இது காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், நாட்டின் வருங்கால சந்ததியினரின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும், வறுமையைக் குறைக்கவும் இத்திட்டம் அவசியம் என்பதில் அதிபர் பிரபோவோ உறுதியாக உள்ளார். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடும், அதற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கும் இந்தோனீசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பு, கல்வி நிதியைப் பாதுகாக்குமா அல்லது அதிபரின் லட்சியத் திட்டத்திற்கு வழிவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News