தாய்லாந்தில் 17 வயது இளம் பெண் ஒருவரின் நிர்வாண உடல் சூட்கேஸ் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டு, இரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், 46 வயது ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்காக்கின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் , பெர்த் நகருக்குச் செல்வதற்கான விமானப் பயணச்சீட்டை வாங்க முயன்றபோது அந்த ஆடவர் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, பட்டாயா நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் பட்டாயா கடற்கரை உல்லாசப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த ஆஸ்திரேலிய ஆடவர், 17 வயது தாய்லாந்து இளம் பெண்ணுடன் உள்ளே செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு பெரிய கருப்பு நிற சூட்கேஸை மோட்டார் சைக்கிளின் பின்னால் வைத்து எடுத்துச் செல்வதும் அதில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று பட்டாயாவில் உள்ள மிதக்கும் சந்தைக்கு பின்புறம் உள்ள இரயில் தண்டவாளம் அருகே, காயங்களுடன் கூடிய அந்தப் பெண்ணின் உடல் சூட்கேஸிற்குள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பிடிபட்ட ஆடவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆடவர், பெண்ணைக் கடத்தியதிலோ அல்லது கொலை செய்ததிலோ தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனினும், அவர் மீது சிறார் கடத்தல், கொலை, சடலத்தை மறைத்தல் மற்றும் பாலியல் நோக்கங்களுக்காக மைனரை கடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய தூதரகம் கைது செய்யப்பட்ட நபருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருகிறது.








