நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது விழுந்து நொறுங்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்தியாவை முந்தி நிலாவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்ய முயன்ற ரஷ்யாவின் நடவடிக்கை முடங்கியது.
இந்தியா விண்வெளி துறையில் சாதித்து வருகிறது. அதன்படி நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலத்தை இந்தியா உருவாக்கியது. கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணுக்கு பாய்ந்தது. வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்க உள்ளது.
கடந்த முறை சந்திரயான் -2 விண்கலம் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் மெதுவாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நிலவில் தரையிறங்க வேண்டிய லேண்டர் விழுந்து நொறுங்கியது. இருப்பினும் ‛சந்திரயான் 2' திட்டத்தின் ஆர்ப்பிட்டர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சந்திரயான் 2 திட்டத்தில் கற்ற பாடத்தின் அடிப்படையில் தற்போது சந்திரயான் - 3 திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது வரை சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி செயல்பட்டு வருகிறது. பூமி சுற்று வட்டபாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் நுழைந்தது. அதன்பிறகு ஆர்ப்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கமான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18 ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் குறைந்தபட்சமாக 113 எனவும், அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து இன்று அதிகாரலை விக்ரம் லேண்டர் நிலவை இன்னும் கிட்ட நெருங்கி உள்ளது. இன்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டருக்கும், நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது குறைந்தபட்சமாக 25 கிலோமீட்டராகவும், அதிகபட்சமாக 134 கிலோமீட்டராகவும் குறைக்கப்பட்டுள்ளது.