Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் கரடித் தாக்குதலால் மற்றொருவர் பலி; பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வால் அச்சம்!
உலகச் செய்திகள்

ஜப்பானில் கரடித் தாக்குதலால் மற்றொருவர் பலி; பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வால் அச்சம்!

Share:

வட ஜப்பானில் கரடித் தாக்குதலால் மற்றொருவர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து அந்நாட்டுப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானில் சமீபகாலமாக கரடிகளின் தாக்குதலால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அசாதாரணமான முறையில் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அமோரி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் கரடி கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதை உள்ளூர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசுத் தரப்புத் தரவுகளின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கரடித் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ஐந்து பேர் கரடித் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் கடந்த ஆண்டு மட்டும் கரடித் தாக்குதல்களுக்கு சாதனை அளவாக 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரடிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதும், கிராமப்புறங்களில் மனித நடமாட்டம் மற்றும் மக்கள் தொகை குறைந்து வருவதுமே இந்தத் தாக்குதல்களுக்குக் முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும், நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட கரடி நடமாட்டங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய சாதனையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

இந்த மாத தொடக்கத்தில், டோக்கியோவிற்கு வடக்கே உள்ள உட்சுனோமியா நகருக்குள் புகுந்த கரடி ஒன்று நான்கு நாட்களாக வீதிகளில் சுற்றியதால், அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதைப் பிடிக்க டஜன் கணக்கான போலீசாரும் வேட்டைக்காரர்களும் களமிறக்கப்பட்டனர். அதேபோல் புகுஷிமா பகுதியிலும் ஒரு கரடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் புகுந்து நான்கு பேரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News