சென்னை: நிலாவை விக்ரம் லேண்டர் தொட்ட மறுநொடியில் இஸ்ரோவுக்கு சந்திரயான் 3 விண்கலம் அனுப்பிய மெசேஜ் விஞ்ஞானிகளை வாய் விட்டு மகிழ்ச்சியாக சிரிக்க வைத்து இருக்கிறது.
நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. எந்த நாடுகளின் விண்கலமும் செல்லாத நிலவின் தெற்கு பகுதியில் நிலை நிறுத்தும் வகையில் இஸ்ரோ இதை அனுப்பியது.
சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் அது 5 முறை சுற்றி வந்தது. அதன் பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் அது நுழைந்தது. பல நாட்களாக அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்து உள்ளது.
இதன் மூலமாக இந்தியா நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை பெற்று உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்று இருக்கிறது.