சீனாவில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரிசி ஏற்றுமதியில் இந்தியாவும் கட்டுப்பாடு விதித்திருப்பதால் உலகம் முழுவதும் அரிசி பற்றாக்குறை அதிகரித்து விலை உயரும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் டோக்சுரி சூறாவளி காரணமாக சீனாவில் பெய்த கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால், இந்த பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. தொடர்ச்சியாக 18 மணி நேரம் பெய்த மழை பெரும் வெள்ளத்தை உருவாக்கியது. இதில், கார்கள், பைக்குகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது பெய்த மழையின் அளவு வெறும் 25 மி.மீதான். ஆனால் சீனாவின் தலைநகரில் ஒரே நாளில் சுமார் 196.9 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 19 பேர் மாயமாகியுள்ளனர். 31,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் ரூ.550 கோடி அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல விவசாய நிலங்கள் முழுமையாக மூழ்கியுள்ளன. சீனாவை பொறுத்த அளவில் உலகம் முழுவதும் அரிசி தேவையில் 23 சதவிகதத்தை இந்நாடு பூர்த்தி செய்கிறது. இப்படி இருக்கையில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மழையை இந்நாடு எதிர்கொண்டிருப்பதால் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரிசி உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காணரமாக சர்வதேச சந்தையில் அரிசியின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கைவசம் இருக்கும் அரிசியையும், இந்த ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அரிசியையும் சீனா நிச்சயம் வெளியில் விற்காது.