உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை மறுத்துள்ள ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்கள், “இது போர் தந்திரம்” என்று தெரிவித்துள்ளன.
சோவியத் யூனியனில் இருந்து கடந்த 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனியாகப் பிரிந்தது. அதன்பிறகும் ரஷ்யாவுடன் அந்த நாடு நட்பு பாராட்டி வந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சி வெடித்து, அவரது ஆட்சி அகற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அங்கு பெரும்பான்மையாக வாழும் ரஷ்யர்களின் விருப்பத்தின்படியே கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்திருப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் விளக்கம் அளித்தார்.
கிழக்கு உக்ரைனின் டோன்ஸ்க், லுகான்ஸ்க் மாகாணங்களில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டன.