May 4, 2026
Thisaigal NewsYouTube
50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த  வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு
உலகச் செய்திகள்

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

Share:

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு சாட்சியாக இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் அமைந்துள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமான தவெக, ஆரம்பம் முதலே அசுர வேகத்தில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 105-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட மாவட்டங்களில் தவெகவின் தாக்கம் மிக வலுவாக இருக்கிறது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தொடர் முன்னிலையில் இருந்து வெற்றியை உறுதி செய்யும் நிலையை எட்டியுள்ளார்.

1977-ல் திமுகவிலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி தொடங்கி, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வரலாற்றுச் சாதனைக்கு பிறகு, தமிழகத்தில் ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய எழுச்சியுடன் முன்னிலை பெறுவது இதுவே முதல்முறையாகும். "எம்.ஜி.ஆருக்குப் பின் மக்களிடையே ஒரு மாபெரும் செல்வாக்கைப் பெற்ற நடிகராக விஜய் உருவெடுத்துள்ளாரா?" என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது. 234 தொகுதிகளில் 118 என்ற மேஜிக் எண்ணை தவெக நெருங்கினால், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமரும் வாய்ப்பு விஜய்க்கு கிட்டும்.

ஆளுங்கட்சியான திமுகவிற்கு இந்தத் தேர்தல் பெரும் சவாலாக அமைந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் இழுபறியைச் சந்தித்து வரும் நிலையில், திமுக கூட்டணி சுமார் 45-55 இடங்களுக்குள் சுருங்கும் சூழல் தெரிகிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தனது கோட்டையான மேற்கு மாவட்டங்களில் ஓரளவு பலத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க, அதிமுக கூட்டணி சுமார் 75-80 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மலேசிய நேரப்படி இரவு 7.30 மணியளவில் தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிய வரும் நிலையில் , தமிழகம் மீண்டும் ஒருமுறை 'தனிப்பெரும் தலைமை'யைத் தேர்ந்தெடுத்துள்ளதா அல்லது 'கூட்டணி ஆட்சி' அமையுமா என்பது உறுதியாகும்.

Related News