ஜார்ஜ்டவுன், ஜனவரி.19-
சவுதி அரேபியா, ஜெடாவில் மாரடைப்பால் காலமான மலேசிய நடிகை நடியா கெசுமாவிற்கு நாளை அங்கு, இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன.
தனது மனைவியின் மரணம் குறித்த மேல் விவரங்களை விஸ்மா புத்ராவின் தெரிவிக்கும் என்று குறிப்பிட்டுள்ள நடியாவின் கணவர் பேராசிரியர் டாக்டர் முஹமட் கமாருல் கபிலான் அப்துல்லா, நேற்று தனது மகளுடன் ஜெடாவிற்குப் புறப்பட்டார்.
தனது மனைவியின் உடலானது ஜெடாவிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்பதையும் முஹமட் கமாருல் உறுதிப்படுத்தியுள்ளார்.
உம்ரா-லண்டன்-பாரிஸ் உள்ளிட்ட ஆன்மீகச் சுற்றுப்பயணம் ஒன்றில் இணைந்திருந்த நடியா, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து ஜெடா புறப்பட்டார்.
ஜெடா, கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்த அவர், அதன் பின்னர் தொடர்புக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக, விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு அவர் இறந்துவிட்டதாக நடியாவின் மகள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.








