மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு, இந்த ஆண்டிற்கான கூடுதல் நிதியாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்துள்ள அறிவிப்பை இந்திய சமூக அமைப்புகள் பெரிதும் வரவேற்றுள்ளன.
இந்த நடவடிக்கையானது சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அவை தெரிவித்துள்ளன.
இது குறித்து பாலிங் மாவட்ட இந்தியர் நலன் மற்றும் உருமாற்று சங்கத்தின் தலைவர் எஸ் சந்தர் சந்துரு கூறுகையில், இந்த ஒதுக்கீட்டு உயர்வானது அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தை முன்னேற்றுவதற்கான தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அன்வார் மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்திய சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றத்தை முக்கிய முன்னுரிமையாகக் கருதுகின்றனர் என்பதையும் இந்த நடவடிக்கை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், கல்வி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் இந்திய சமூகத்தை வலுப்படுத்த அரசாங்கம் உண்மையிலேயே தீவிரமாக செயல்படுகிறது என்ற நம்பிக்கையை இந்த நடவடிக்கை ஏற்படுத்துவதாகவும்எஸ் சந்தர் சந்துரு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெகிரி செம்பிலான் மனித வள மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் டேனியல் செல்வ ராயர் கூறுகையில், இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு இந்திய இளைஞர்களிடையே மனிதவள மேம்பாடு, திறன் பயிற்சி மற்றும் தொழில்முனைவுத்திறனை வலுப்படுத்தும் முன்னேற்றகரமான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒதுக்கீடு இந்திய சமூகத்தினருக்கு தங்களது திறன்களை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மலேசிய மக்கள் சுகாதாரச் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் பெலையப்பன் கூறுகையில், இந்த ஒதுக்கீட்டு உயர்வு சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு கொண்ட வளர்ச்சியை உறுதி செய்யும் அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனுடன் இணைந்து, மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுடனான சந்திப்பு மற்றும் மித்ரா மூலமாக இந்திய மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் மடிக்கணினி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், மித்ரா அமைப்பின் மேம்பட்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதி வழங்குவது குறித்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








