மத்திய கிழக்கு புவிசார் அரசியல் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியாவின் எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய 'புடி மடானி 95' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரான் 95 பெட்ரோல் கோட்டாவை அரசாங்கம் குறைக்கக்கூடும் என்று நிதியமைச்சின் துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'அஃபின் மார்க்கெட் அவுட்லுக்' மாநாட்டில் பேசிய லியூ சின் தோங், தற்போதைய 200 லிட்டர் மானியக் கோட்டாவை 150 லிட்டராகக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
புள்ளிவிவரங்களின்படி, 80 சதவீத மலேசியர்கள் மாதத்திற்கு 200 லிட்டருக்கும் குறைவாகவே பெட்ரோல் பயன்படுத்துகின்றனர். மேலும், 60 சதவீத மக்கள் 150 லிட்டருக்கும் குறைவாகப் பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், வெளிநாட்டினர் மற்றும் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரான T15, T20 ஆகியோருக்கு இந்த மானியம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் தகுதி வரம்புகளை இறுக்கமாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








