ஜோகூர், கோத்தா திங்கி பகுதியில், அதிவேக சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 34 வயதான யியோ தியான் வென் லியோங் மற்றும் 33 வயதான நிங் புவாய் யிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இவ்விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசுப் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஜாலான் ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையின் கிலோமீட்டர் 57.5 பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஆண் நபர் ஓட்டிச் சென்ற அதிவேக கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
விபத்திற்குப் பின்னர் கார் தீப்பிடித்ததால், உள்ளே சிக்கிக் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக யூசுப் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.








