கூலிம் மாவட்ட நகராண்மை கழகம் தனது 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, ஒரே நிமிடத்தில் 700 மரங்களை நட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கூலிம் ஹய் தேக் பார்க் FASA 4 பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகராண்மை கழக உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சாலைப் பிரதிநிதிகள் இணைந்து 'டெகோமா' ரக மரங்களை நட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தினர். இது குறித்து கூலிம் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ தோ ஹாஜி ஹெல்மி பின் யூசோப் கூறுகையில், "25 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டங்களாக இருந்த கூலிம், இன்று உலகத்தரம் வாய்ந்த உயர்தொழில்நுட்ப நகரமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இடையிலான சமநிலையை உறுதி செய்யவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது வெறும் எண்களுக்கான சாதனை அல்ல; எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்பட்ட பசுமைச் சொத்து," எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மலேசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரி மெகாட் ஃபாரிஸ் ஹுசேன், இச்சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான சான்றிதழை டத்தோ ஹாஜி ஹெல்மிடம் வழங்கினார். இதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உயர்தர தொழில்நுட்ப நகராண்மை கழகமாக கூலிம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.










