புக்கிட் பிந்தாங் பகுதியில் இன்று இரவு நடைபெறவுள்ள "நைட் ரீசெட்: பெர்சாத்து தாலம் சாஃப்" எனும் சமய நிகழ்ச்சி காரணமாக, அப்பகுதியின் முக்கியச் சாலைகள் நிலைகள் வாரியாக மூடப்பட்டுப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளன. பெவிலியன் கோலாலம்பூர் வணிக வளாகத்திற்கு முன்பாக இரவு 8:30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்த கோலாலம்பூர் போக்குவரத்துத் துறை போலீஸ் தலைவர் முகமட் சம்சூரி முகமட் ஈசா, ஜாலான் புக்கிட் பிந்தாங் மற்றும் அதனைச் சார்ந்த பாதைகள் நாளை மே 9-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைத் திட்டமிடுமாறும் அல்லது நெரிசலைத் தவிர்க்க எல்ஆர்டி, எம்ஆர்டி போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.








