முன்னாள் இராணுவத் தளபதிஹபிசுதீன் ஜந்தான்னின் மனைவி சல்வானி அன்வார் மற்றும் மனைவியின் சகோதரி நூர் ஷாஹிரா அதிரா அன்வார் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசுடமையாக்க கோரி அரசு தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அம்மனுவில் சல்வானி மற்றும் நூர் ஷாஹிரா ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சல்வானி தொடர்பான மனுவில், அரசாங்கத்திடம் ஒப்படைக்க கோரப்பட்டுள்ள சொத்துகளில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் இரக வாகனம், 15.1 கிராம் எடையுடைய 916 தங்க வளையல்கள் மற்றும் 1.33 கிராம், 1.41 கிராம் மற்றும் 1.35 கிராம் எடையுடைய மூன்று தங்க மோதிரங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், பிரதிவாதியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6.640 கிராம் எடையுடைய தங்க காதணிகளும் பறிமுதல் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் 10,930 ரிங்கிட் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துகள் பணமோசடித் தடுப்பு, பயங்கரவாத நிதியளிப்புத் தடுப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகளின் வருவாய் சட்டம் 2001, பிரிவு 45(2) கீழ் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.
தற்போது அவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM வசம் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையானது இன்று உயர்நீதிமன்ற துணைப் பதிவாளர் ஜரிதா ஒய் அப்துல் ஜாபர் முன்னிலையில் நடைபெற்றதாகவும், வழக்கின் அடுத்த விசாரணையானது வரும் மே 19-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் துணை அரசு தரப்பு வழக்கறிஞர் நத்ரா ஃபரேஹா ரஹ்மத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நூர் ஷாஹிரா தொடர்பான வழக்கில், 23 ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் மற்றும் 15 நகைப் பொருட்களை அரசுடமையாக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக துணை அரசு தரப்பு வழக்கறிஞர் மஹாதி அப்துல் ஜுமாத், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லி அகமட் முன்னிலையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு மேலாண்மை மற்றும் மூன்றாம் தரப்பினரின் வருகையை, வரும் ஜூன் 26-ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.








