கோலாலம்பூர், நவம்பர்.11-
அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷெரோன் ஷீலாவை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு போலீசார் தயாராக இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்பு லைசென்ஸின்றி வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தான் ஆடவரைப் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து கொண்டு இருந்த போது போலீஸ் பணிக்கு ஷெரோன் ஷீலா இடையூறு விளைவித்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.








