May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் மே 17-ஆம் தேதி தேசிய மாநாடு: தேர்தல் களத்திற்கு முழு வீச்சில் தயாராகிறது பக்காத்தான் ஹராப்பான்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் மே 17-ஆம் தேதி தேசிய மாநாடு: தேர்தல் களத்திற்கு முழு வீச்சில் தயாராகிறது பக்காத்தான் ஹராப்பான்

Share:

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, வரும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் 16-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, தனது அரசியல் இயந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில், அதன் தேசிய மாநாட்டை வரும் மே 17ஆம் தேதி ஜோகூரில் நடத்தவுள்ளது.

இம்மாநாட்டில் கூட்டணியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

எதிர்கால தேர்தல் வியூகங்கள், கூட்டணியின் ஒற்றுமை மற்றும் மக்களிடம் ஆதரவை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய மாநாடான இது, ஜோகூரில் உள்ள பெர்சாடா ஜோகூர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் என்று பக்காத்தான் கூட்டணி இன்று அறிவித்துள்ளது.

இந்த தேசிய மாநாட்டை மீண்டும் நடத்துவதன் காரணம், அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், சீர்திருத்தக் கொள்கைகளை முன்னெடுக்கவும், மக்களின் நலனுக்காக மடானி அரசாங்கத்தின் இலக்குகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது.

பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இம்மாநாட்டில் கலந்துகொண்டு பிரதிநிதிகளுக்கு சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும், கூட்டணியின் அனைத்து உறுப்புக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் இதில் பங்கேற்று, தேர்தலை எதிர்கொள்ளும் ஒற்றுமை மற்றும் தயார்நிலையை வலியுறுத்த உள்ளனர்.

இந்த அறிக்கையை பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாமி பாட்சில், அமானா உதவித் தலைவர் அட்லி ஜஹாரி மற்றும் ஜசெக கட்சியைச் சேர்ந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சான் ஜோஹான் ஆகியோர் கூட்டாக இன்று வெளியிட்டுள்ளனர்.

Related News