லங்காவியில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை, போலீஸ் அதிகாரி ஒருவர் வழிநடத்தி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் குறித்து எந்தத் தகவலையும் வெளியிட இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போலீஸ் பணியாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், எந்த சமரசமும் செய்யப்படாது என்றும், இவ்வாண்டில் பல பெரிய அளவிலான பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காலிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
லங்காவியில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் போதைப்பொருள் தலைவராக கருதப்பட்ட “மாட் நஹார்” உயிரிழந்ததைத் தொடர்ந்து, புதிய கட்டமைப்புடன் கூடிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் உருவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த கும்பலை “மிஸ்டர் ஏ” என அடையாளம் காணப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி வழிநடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், முன்னர்மாட் நஹார் கும்பலுடன் தொடர்பில் இருந்த பலரும் இந்த புதிய வலையமைப்பில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








