நாட்டில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட புதிய 'மைகாட் ' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள பழைய அடையாள அட்டைகளை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ சைபுடின், 12 வயது பூர்த்தியான ஒவ்வொரு குடிமகனும் அடையாள அட்டை வைத்திருப்பது சட்டப்படி கட்டாயம் என்றாலும், புதிய அட்டை அறிமுகமானதும் பழையதை உடனே மாற்ற வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று விளக்கமளித்தார்.
தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் பழைய மைகாட்டை வைத்துள்ளதால், ஜூன் 1 அன்று தேசியப் பதிவுத் துறையான JPN அலுவலகங்களில் மக்கள் கூட்டமாகத் திரள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய அடையாள அட்டையில் பாதுகாப்பு அம்சங்கள் 23-லிருந்து 53-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் லேசர் செதுக்கல், புற ஊதா கூறுகள், ஹோலோகிராம்கள் , கியுலோச் வடிவங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் தொழில்நுட்பம் எனப் பல்வேறு நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மக்களின் பழைய மைபேட் சேதமடைந்தாலோ அல்லது தொலைந்து போனாலோ மட்டுமே மாற்றுவது குறித்து யோசிக்கலாம், அதுவரை பழைய அட்டையே செல்லுபடியாகும் என்று டத்தோஸ்ரீ சைபுடின் விளக்கினார்.








