மலேசியாவும் கம்போடியாவும்,வர்த்தகம், ஹலால், உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், குறிப்பாக எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் வேலை மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 48-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸின் செபு நகரில் உள்ள அன்வார், மாநாட்டிற்கு இடையே கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் உடன் நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது, உயர்கல்வி, ஹலால், வேளாண்மை மற்றும் சுற்றுலா துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு தாங்கள் இருவருமே ஒப்புக் கொண்டதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
ஆசியான் நாடுகளின் பகிர்ந்த முன்னேற்றம் மற்றும் திறந்த அணுகுமுறை என்ற மனப்பாங்கிற்கு இணங்க, கம்போடியாவிலிருந்து மேலும் அதிகமான மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருவதை மலேசியா வரவேற்கிறது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








