ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 5 உறுப்பினர்களை நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜசெக. துணைத் தலைவரும், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் சட்டமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜனநாயகத்திற்கும் நாட்டின் அரசியலமைப்பிற்கும் எதிரானது என்று அவர் சாடினார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் சட்டமன்றத்தில் வாக்களிப்பதும், விவாதிப்பதும் 'கொல்லைப்புற வழியாக' அதிகாரத்திற்கு வருவதற்குச் சமம். இது நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் செயலாகும்," என ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இணையான ஊதியம் மற்றும் அதிகாரங்களை நியமன உறுப்பினர்களுக்கு வழங்குவது நியாயமற்றது என்றும், இந்த முடிவை எதிர்த்து ஜொகூர் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் ங்கா கோர் மிங் அறிவித்தார்.
பகாங், திராங்கானு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இம்முறை நடைமுறையில் இருந்தாலும், ஜொகூர் அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








