அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே, பி.கே.ஆர் அத்தொகுதியை மீட்டெடுக்க முடியும் என பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
அன்வாரின் வருகை வடக்கு மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்த உதவும் என அந்த பிகேஆர். எம்.பி. நம்புகிறார். கடந்த 15-வது பொதுத் தேர்தலில், அன்வாரின் மகள் நூருல் இசா இத்தொகுதியில் தோல்வியடைந்ததையும், அங்குள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியதையும் ஹாசன் சுட்டிக்காட்டினார்.
தற்போது அங்கு நிலவும் 'பச்சை அலை' தாக்கத்தால் பெர்மாத்தாங் பாவ் இனி பி.கே.ஆரின் கோட்டை என உறுதியாகச் சொல்ல முடியாது என்றும், எனவே அன்வார் அங்கு திரும்புவதே சரியான உத்தியாக இருக்கும் என்றும் அவர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.








