நெகிரி செம்பிலான் முதல் மலாக்கா வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினரைத் திணறடித்த முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெகிரி செம்பிலானின் செம்போங் பகுதியில், தான் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி காரால் வேன் ஒன்றின் மீது மோதிய அந்தப் பெண், காவல்துறையினர் தடுத்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, ரெம்பாவ் முதல் மலாக்கா தெங்கா வரை நீண்ட தூரம் நீடித்த இந்தத் துரத்தல் வேட்டை, இறுதியில் அவர் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானதில் முடிவுக்கு வந்தது.
காவல்துறையில் 'சர்ஜென்ட்' அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அந்தப் பெண்ணின் காரைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து நான்கு எக்ஸ்டசி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விபத்தில் முகத்தில் காயமடைந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார் என்று ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மி அலி தெரிவித்தார்.








