மலேசியாவிலேயே பிறந்த முதல் K9 மோப்ப நாய் குட்டியாக 'பிரேவ்' உருவெடுத்துள்ளது. வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு இனப்பெருக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 18-இல் லோட்டி - மைல்ஸ் இணையருக்கு இக்குட்டி பிறந்தது. அந்த நாய் குட்டி பிறந்து 52 நாட்கள் ஆகின்றன.
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறுகையில், தீயணைப்புத் துறையில் நிலவும் மோப்ப நாய்களின் பற்றாக்குறையைப் போக்கவும், வெளிநாட்டிலிருந்து வாங்கும் செலவைக் குறைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போதுள்ள 34 நாய்களுடன் கூடுதலாக 56 நாய்கள் தேவைப்படும் நிலையில், கோலாலம்பூர் ஜாலான் கிள்ளான் லாமாவில் புதிய K9 செயல்பாட்டு மையத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாங் காலி நிலச்சரிவு பேரிடர் மற்றும் துருக்கி நிலநடுக்கம் போன்ற மீட்புப் பணிகளில் K9 பிரிவின் மோப்ப நாய்களின் சேவை சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து, அவ்வகை நாய்களின் இனப்பெருக்கத்திற்கான இந்த உள்நாட்டுத் திட்டம் / மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் என அமைச்சர் ங்கா கோர் மிங் நம்பிக்கை தெரிவித்தார்.














